முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் எழுதிய ’அவரும் நானும்இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு நிகழ்வு, அண்மையில் சென்னையில் அரங்கேறியது.
திடீர் உடல் நலக்குறைவால் முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோவில் அட்மிட் ஆன நிலையில்,இந்த விழா நடந்ததால் அனைவரின் உள்ளமும் நெகிழ்ச்சியில் உருகியதை உணர முடிந்தது.
அரசியல் தலைவர்கள்,முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள்,நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகை யாளர்கள் என அவை முழுதும் வி.ஐ.பி.க்களால் நிறைந்திருந்தது.
அரசு இசைக்கல்லூரி மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய விழாவில்,நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் புத்தகத்தின் தலைப்பே நமக் கொரு கைவிளக்கு. அதன் ஒளியில் திளைக்க வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.குறுந்தொகையில் 23 ஆம் பாட்டாக அகவல் மகளே அகவன் மகளே இடம்பெற்றிருக்கிறது. அதில் அவர் நல் நெடுங்குன்றம்’என்று தலைவனின் ஊர் பற்றி ஔவையார் குறிப்பிடுகிறார்.சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற சொல்லான ‘அவர்’ என்ற சொல்லே, இங்கும் பிரதானமாக இருக்கிறது.இந்த நூலில் குறிபிடப்பட்டிருக்கும் அவர்’,நெருப்பாற்றில் நீந்தினாலும், அவரது சுட்டுவிரலே இந்தியாவின் அரசியலலைத் தீர்மானிக்கிறது.அவருக்கு மரியாதை கலந்த வணக்கம்’ என்று அங்கிருந்தபடியே முதல்வருக்கு வணக்கத்தை வெளியிட்டு நிகழ்ச்சிக்கு எழுச்சியை ஊட்டினார்.
பதிப்பகத்தின் சார்பில் பேசிய கவிஞர் மனுஷ்யபுத்திரன் “புத்தகங்களை எழுதுவதும் பரப்புவதும் இந்த அரசின் கொள்கைகளில் ஒன்று.
இங்கே நூலை வெளியிட்டிருக்கும் அண்ணியார் அவர்கள், கலைஞரின் மரணம் அந்தக் குடும்பத்தை எப்படி எல்லாம் அசைத்தது என்பதை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு அரசியல் தலைவரைப் பற்றி அவரது இணையர் எழுதிய மகத்தான நூல் இது”என்று சிலாகித்தார்.
இதைத் தொடர்ந்து,நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. எழுத்தாளர் சிவசங்கரி புத்தகத்தை வெளியிட,அதன் முதல் பிரதியை டாஃபே குழும நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.மேலும், நூலாசிரியரின் பேரன்களான நளன் சபரீசன்,இன்பன் உதயநிதி ஆகியோர் பெற்றுக்கொள்ள, இவர்களைத் தொடர்ந்து பேத்திகளும் பெற்றுக்கொண்டு அரங்கை அலங்கரித்தனர்.
பத்திரிகையாளர் லோகநாயகி “இந்த நூலுக்கான தகவல்களைப் பகிரும்போது, துர்கா , 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவைகளைக் கூட அப்படியே, அதே உணர்ச்சியோடு விவரித்து, தனது நினைவாற்றலால் திகைக்க வைத்தார்” என்று நெகிழ்ந்தார்.
ஆங்கிலத்தில் பேசிய டாஃபே குழும மல்லிகா சீனிவாசன், எப்போதும் புன்னகையோடும் திறந்த மனதோடும் பேசக்கூடியவர்” என்று நூலாசிரியரைப் புகழ்ந்தார்.
கோவை சந்திரா - ஜி.ஆர்.ஜி நிறுவனங்களின் தலைவர்நந்தினி ரங்கசாமியோ, “முதல்வரின் மனிதநேயம்,அன்பு பற்றியும் இதில் எழுதியிருக்கிறார்.
இதைப் படிக்கும் போது, ஒரு ரொமாண்டிக் நாவலைப் படிப்பது போல் இருந்தது. முதல்வரின் வெற்றிக்குப் பின் துர்கா ஸ்டாலின் இருப்பதை முதல்வரே சொல்லியிருக்கிறார்.
அதுபோல் முதல்வரின் வெற்றிக்குப் பின் உழைப்பு உழைப்பு உழைப்புதான் என்று இவர் சொல்கிறார்” என்றார் உற்சாகத்தோடு.
மேனாள் நீதிபதி பவானி சுப்பராயனோ “கதையல்ல இது நிஜம்! செறிவான கருத்துகள்; இனிமையான சொல் நடையில்! கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் அன்று. கலைஞர் வீட்டும் கவின்மகளும் எழுதுகிறார் புத்தகம் இன்று.” என்றெல்லாம் கவித்துவமாய்ப் பேசி அவையை ரசிக்க வைத்தார்.
சிறப்புரை ஆற்றிய எழுத்தாளர் சிவசங்கரி “படிக்கத் தொடங்கினால் கிழே வைக்கமுடியாத அளவிற்கு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் துர்கா.அவரும் நானும் என்ற தலைப்பே மிகச்சிறப்பாக இருக்கிறது. அதுவே ஈர்க்கிறது. இதில் அவர் அரசியல் விசயமும் பேசியிருக்கிறார். பெண்களுக்காக முதல்வர் கொண்டுவந்த திட்டங்கள் பற்றியெல் லாம் நிறைய எழுதியிருக்கிறார்.ஆனால் அதில் பிரச்சார வாடையே இல்லை. கணவரிடம் தாய்மையை உணர்ந்தேன் என்று அவர் சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது. இந்தப் புத்தகத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கும் அவர் பகிரங்கமாக பதில் சொல்லியிருக்கிறார். மனஸ்தாபத்தின்போது முதலில் உங்களில் யார் இறங்குவீர்கள்? என்ற கேள்விக்கும் பதில்சொல்லியிருக்கும் துர்கா, யார் பிரச்சினைக்குக் காரணமோ அவர்கள் இறங்கிப்போவோம் என்று அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார்.இது ஒரு குடும்ப இலக்கி யம். என்று பாராட்டினார்.
உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் செல்வி ராமச்சந்திரன் நன்றியுரை ஆற்றிய பின், ஏற்புரை ஆற்றவந்த நூலாசிரியர் துர்கா ஸ்டாலின், “தமிழ்நாட்டின் முதல்வராக,ஒரு கட்சித் தலைவராக என் கணவர் இருந்தாலும், தனக்குக் கிடைத்த நேரத்தில், இதை முழுதாகப் படித்து,எனக்கு சில ஆலோசனைகளையும் சொல்லி,இந்த நூலுக்கு அன்பு உரையும் எழுதிக் கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.வெளியீட்டு விழாவிற்கு அவரால் வரமுடியவில்லை என்றாலும், அவர் மனம் முழுக்க இங்குதான் இருக்கும்.
நேரலையில் முழு நிகழ்வையும் பார்த்துக்கொண்டிருக்கும் என் கணவருக்கு முதல் நன்றி. என்னை இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்தி அனுப்பியதும் அவர்தான் என்று உருக்கமாக ஆரம்பித்தவர்,
”எங்கள் மகன் உதயா, மருமகள் கிருத்திகா, மாப்பிள்ளை சபரீசன் ஆகியோர் என் கணவர் பற்றித் தங்கள் எண்ணங்களை இதில் பதிவு செய்திருக்கிறார்கள். இப்போது வளர்ந்த எங்கள் பேரப்பிள்ளைகள் நால்வரும்கூட, எங்களைப் பற்றியும், தங்கள் எண்ணங்கள் பற்றியும் பகிர்ந்தது இந்த நூலில் சிறப்பம்சம். ஒரு பாட்டியாக அதில் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அவரும் நானும் என்ற இந்த நூல், என் கணவர் பற்றியும் என்னைப் பற்றியும் எங்கள் 50 வருட கால வாழ்க்கை பற்றியும் உணர்வுப்பூர்வமாக நான் என்னுடைய பார்வையில் சொல்லும் நூல்.” என்று முத்தாய்ப்பு வைத்தார்.
மொத்தத்தில் ’அவரும் நானும்’ நூல் வெளியீட்டு விழா, உணர்ச்சி அலைகள் நிரம்பிய ஒரு பண்பட்ட குடும்பத் திருவிழாவாகவே நடந்துமுடிந்தது.
-நாடன்